சென்னை திருவேற்காடு மாந்தோப்பு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவு கடும் கண்டனத்திற்குரியது – பொதுமக்களுக்கும் நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இம்முடிவை திமுக அரசு கைவிட வேண்டும். சென்னை திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி பகுதியில் அமைந்திருக்கும் மாந்தோப்பு விளையாட்டுத் திடலில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானமாக மட்டுமல்லாமல் பொதுமக்கள் உடற்பயிற்சி மற்றும் யோகாப் பயிற்சி செய்யக்கூடிய இடமாகவும் இருக்கும் இந்த மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள், ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயிலும் அரசுப்பள்ளி மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் கோலடி ஏரி என சுற்றுவட்டாரத்தில் மக்கள் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாந்தோப்பு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பது பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

ஈரோட்டில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 17 வயது சிறுமி – பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அரங்கேறும் குற்றச்சம்பவங்களை கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஈரோடு மாவட்டத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் ஆட்சியமைத்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை முதலமைச்சரும் திமுகவினரும் நேற்று கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில் ஈரோட்டில் சிறுமி ஒருவருக்கு நடைபெற்றிருக்கும் இக்கொடூரச் சம்பவம் பெண்களுக்கு எதிரான திமுகவின் நான்காண்டு கால அவல ஆட்சியை பொதுமக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை தடுக்கவோ, அதற்கு அடிப்படை காரணமாக இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை கட்டுப்படுத்தவோ கடந்த நான்கு ஆண்டுகளில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஈரோட்டில் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, திமுக ஆட்சியின் எஞ்சிய ஓராண்டிலாவது பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு.சத்ய நாராயண பிரசாத் அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. வழக்கறிஞராக பல்வேறு வழக்குகளில் திறம்பட வாதாடியதோடு, நீதிபதியாக பொறுப்பேற்று நீதித்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய நீதிபதி திரு.சத்ய நாராயண பிரசாத் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், வழக்கறிஞர்கள் மற்றும் சக நீதிபதிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் – தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். OPERATION SINDOOR எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் துல்லியமான தாக்குதலின் மூலம் பயங்கரவாத அமைப்புகளின் உட்கட்டமைப்பை சிதைத்திருக்கும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை மிகுந்த பாராட்டுதலுக்குரியது. இந்த நேரத்தில், பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க உறுதி கொண்டிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், இந்திய ராணுவம் மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தேசத்தின் மக்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம். ஜெய்ஹிந்த்

டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது – தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை உடனடியாக விடுவிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்க வேண்டிய 250 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க மறுக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு நெல் உற்பத்தியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதலுக்கான நிதியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவிக்கும் நிலையில், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கான நிதியை உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரப்போக்கு டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2016-17 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இருந்து நெல் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரெனெ ஏப்ரல் மாதத்திற்கான நெல் கொள்முதலை தன்னிச்சையாக ரத்து செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை உடனடியாக விடுவிப்பதோடு, இனிவரும் காலங்களிலும் எந்தவித பாரபட்சமுமின்றி தொடர்ந்து நெல்கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என நுகர்பொருள் வாணிபக் கழகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu

கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராத அம்மா திருமண மண்டபங்கள் – இதயதெய்வம் அம்மா அவர்களின் மக்கள் நலத்திட்டங்களை திட்டமிட்டு முடக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் ரூ.11 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட அம்மா திருமண மண்டபம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மிகக் குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த ஏதுவாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிவுறுத்தலின் படி சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்களை மூடி வைத்திருக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.இதயதெய்வம் அம்மா அவர்களின் தொலைநோக்கு சிந்தனையால் உருவாக்கப்பட்ட அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என பெரும்பாலான திட்டங்களை திட்டமிட்டு முடக்கிய திமுக அரசு தற்போது அம்மா திருமண மண்டபங்களை திறக்காமல் காலம் தாழ்த்துவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் அம்மா திருமண மண்டபங்களை திறந்து உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, மக்கள் நலத்திட்டங்களை திட்டமிட்டு முடக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை கைவிட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.