டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவருமான திரு.ரத்தன் டாடா அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தியாவை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட டாடா நிறுவனத்தை தன் தொலைநோக்கு சிந்தனையால் உலகளாவிய வணிகமாக மாற்றிய திரு.ரத்தன் டாடா அவர்களின் மறைவு இந்திய தொழில்துறைக்கு பேரிழப்பாகும். எந்த தொழிலாக இருந்தாலும் அதில் நேர்மையை கடைபிடிப்பதில் உறுதியாக இருந்த திரு.ரத்தன் டாடா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அடிப்படை உரிமைகளுக்காக போராடும் சாம்சங் நிறுவன ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது- தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமையான தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பதாக கூறி நான்கு வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொழிலாளர்களின் சட்டப்பூர்வமான உரிமைகளில் ஒன்றான தொழிற்சங்கத்தை அமைக்கும் முடிவுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய தமிழக அரசு, தொடக்கம் முதலே சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதும், போராட்டத்தை ஒடுக்க முயற்சிப்பதும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் பிரதிநிதிகளை இரவு நேரத்தில் வீடு தேடிச் சென்று கைது செய்வதும், போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் தொழிலாளர்களை கைது செய்ய பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்வதும் தான் தொழிலாளர் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியா ? என தொழிலாளர்களே சரமாரியான கேள்விகளை எழுப்புகின்றனர். எனவே, காவல் துறையால் கைது செய்யப்பட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரடியாக தலையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பள்ளிகளுக்கு அருகே இயங்கும் மதுபானக்கடையை அகற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கைது – மக்கள் நலனுக்காக ஜனநாயக ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி மறுத்து அடக்குமுறையை கையாண்ட காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. திருச்சி மாவட்டம் சீனிவாசா நகரில் பள்ளிகளுக்கு அருகாமையில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி பொதுமக்களுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.செந்தில்நாதன் அவர்கள் உட்பட 50க்கும் அதிகமானோர் காவல்துறையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே உறையூர் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட தனியார் மனமகிழ் மன்றத்தை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போதும் கைது செய்த காவல்துறை, தற்போது பொதுமக்களின் நலனுக்கான உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கும் அனுமதி மறுத்து அடக்குமுறையை கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வரும் போதெல்லாம் அடக்குமுறையும், அதிகாரப்போக்கும் அதிகரிக்கும் என்பதற்கு ஏற்ப, அரசின் தவறுகளையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதும், பொதுமக்களின் நலனை முன்னிறுத்தும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கும் அனுமதி மறுப்பதும் திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் இடத்திற்கு அருகே பள்ளிகள் இருப்பதை காரணமாக கூறி அனுமதி மறுத்திருக்கும் காவல்துறை, அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இயங்கிவரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுபானக்கடையை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வான தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உதவித் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது – உரிய நேரத்தில் உதவித் தொகையை வழங்கி விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும். தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் (SGFI) சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை தற்போதுவரை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியப் போக்கால் தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க இயலாமல் போன நிலையில், நடப்பாண்டிலும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும், வீரர் வீராங்கனைகளுக்கான உதவித் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், தற்போது வரை ஊக்கத் தொகை வழங்கப்படாத காரணத்தினால், போக்குவரத்து, உணவு என அனைத்துவிதமான செலவுகளுக்கும் மாணவர்களிடமே தொகையை வசூலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தினை நடத்துவதற்கும், விளம்பரத்திற்காக வீண் செலவு செய்வதற்கும் நிதி ஒதுக்கும் திமுக அரசு, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்படும் தொகையை கூட உரிய நேரத்தில் வழங்க மறுப்பது ஏன்? என உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் தேசிய அளவிலான போட்டிகளில் தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.