சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் நர்சிங் படிக்காதவர்களை செவிலியர்களாக நியமிக்கத் திட்டமா? பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நலத்தோடு விளையாடும் சென்னை மாநகராட்சியின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. நர்சிங் படிப்பு படிக்காதவர்களை பணிமூப்பு அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கிவரும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக நியமிக்க முடிவு செய்து அது தொடர்பாக வட்டார துணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் செவிலியர்கள் நியமனத்திற்கான தகுதிகளை எந்தவித முன்னறிவிப்புமின்றி மாற்றியதோடு, நர்சிங் படிக்காதவர்களை பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே செவிலியர்களாக நியமிக்க முயற்சிக்கும் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. ஊட்டச்சத்து ஆலோசனை வழங்குவதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் பயிற்சி வழங்கப்பட்டிருப்பவர்களை செவிலியர்களாக நியமித்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் குறைபாடுகள் ஏற்படுவதோடு நோயாளிகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாவர்கள் என எம்.ஆர்.பி செவிலியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. எனவே, போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்களை பணிமூப்பு அடிப்படையில் செவிலியர்களாக நியமிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தேர்வாணையத்தின் மூலம் முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர்களையே செவிலியர்களாக நியமிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்.

மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் மதுரை மாநகரம் – பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மதுரையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் மாநகரத்தின் பெரும்பாலான குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மதுரை கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், உணவு, பால், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படாதது கடும் கண்டனத்திற்குரியது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், மழைநீர் செல்வதற்கான கால்வாய்களையும், ஓடைகளையும் முறையாக தூர்வாராததுமே பாதிப்புக்கு காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதோடு, இனிவரும் பெருமழைக் காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு – மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு எதிராக கொந்தளித்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? சென்னைத் தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை தவறாக பாடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக கூறி அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மீது இனவாத கருத்துக்களை முன்வைத்த முதலமைச்சர் அவர்களும், ஆளுநர் அவர்களின் வயது மற்றும் பொறுப்பைக் கூட உணராமல் பொதுவெளியில் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்த துணை முதலமைச்சர் அவர்களும் தற்போது நடைபெற்றிருக்கும் தமிழ்த்தாய் அவமதிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? துணை முதலமைச்சர் தலைமை தாங்கிய நிகழ்வில் அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டிருப்பதன் மூலம், தமிழ்ப்பற்று மற்றும் தாய்மொழிப்பற்று எனும் திமுக அரசின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற வரிகளுக்கு ஏற்ப தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமதிப்பை சாதாரண நிகழ்வாக கடந்து செல்லாமல், அதற்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

இந்திய சுதந்திரப் போருக்கு முன்பாகவே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி முதல் போர் பிரகடனம் அறிவித்த மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவு நாள் இன்று. தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து இறுதிவரை போரிட்டு வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர்கள் மருதுசகோதரர்களின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் – தூய்மைப் பணியாளர்களின் அருகில் அமர்ந்து உணவருந்திய முதலமைச்சர், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மைப்பணியாளர்கள் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும், மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் மாநிலத்தை தூய்மைப்படுத்தும் பணியில் இரவு, பகல் பாராமல் களப்பணி ஆற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் கூட வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. நிரந்தர பணி பாதுகாப்பின்றியும், போதுமான பாதுகாப்பு உபகரணங்களின்றியும் தினக்கூலிகளாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், வருடத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு அருகில் அமர்ந்து உணவருந்துவது போன்ற புகைப்படங்களை எடுத்துக் கொள்வது தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட எந்த வகையிலும் உதவாது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தூய்மைப் பணியாளர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு, பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் என வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளை கடந்த பின்பும் அந்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட முறையாக நிறைவேற்ற முன்வரவில்லை என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப்பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதோடு, தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக தூய்மைப் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.