திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் பலி – பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரத் தவறிய இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கூட செய்து தர தவறிய இந்துசமய அறநிலையத்துறையின் அலட்சியப்போக்கே பக்தரின் உயிரிழப்புக்கு காரணம் என சக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவித வசதிகளுமின்றி பக்தர்கள் அடைத்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்த போது, திருப்பதி கோயிலை சுட்டிக்காட்டி அலட்சியமாக பதில் கூறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், பக்தர் உயிரிழப்புக்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்? எனவே, இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் முறையான திட்டமிடலோடு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

ரயில்வே தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்குவதா? – தமிழக தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். ரயில்வே வாரியத்தின் மூலம் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள உதவி ஓட்டுநர் பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு தயாராகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 6,315 பேரில் சுமார் 80 சதவிகிதம் பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களில் அமைக்கப்படும் இது போன்ற தேர்வு மையங்களால், தொலைதூர பயணம் மேற்கொள்வது மட்டுமின்றி, உரிய நேரத்திற்குள் தேர்வு மையத்தை அடைவதும் மிகுந்த சிரமம் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ரயில்வே பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசையும், ரயில்வே துறையையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.