பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசு பேருந்துகளை தனியார் மயமாக்க தி.மு.க. அரசு திட்டமிடுவதாக ஆளுங்கட்சி தொழிற்சங்கமே குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சரே கூறியிருப்பதன் மூலம் பேருந்து போக்குவரத்து, தனியார் மயமாக்கப்படும் என்பது உறுதியாக தெரியவருகிறது. மக்களுக்கு குறைந்த செலவில் பொதுப்போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கதக்கதல்ல. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இருதரப்பையும் பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். போக்குவரத்துறையில் புரையோடியிருக்கும் முறைகேடுகளை களையெடுத்து லாபநோக்கில் போக்குவரத்துறையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

வெளிமாநில தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரன்முறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இதற்காகதான், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு, நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம். ஆனால், அதனை தி.மு.க. அரசு காதில்வாங்கிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இந்த விவகாரம் மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகாவது, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு மேலும் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து அவர்களைக் காப்பாற்றும் விதமாக தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவார்களா? தேர்தல் அறிக்கையில் அப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது தி.மு.க.வுக்கு நினைவிருக்கிறதா?

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் குளறுபடி என்ற செய்தி 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் தேர்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மை தேர்வில் சென்னை, திருச்சி உள்ளிட்ட தேர்வு மையங்களில் பதிவெண் குளறுபடியால் தேர்வு தாமதமாக தொடங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அலட்சியமாக செயல்பட்டதே குளறுபடிக்கு காரணம் என தேர்வர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை எனும் எதிர்காலம் பாதிக்கப்படாதவாறு இப்போதைய குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு குளறுபடி இன்றி புதிய தேர்வு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.