November 11, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது – அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்து உரிமைகளையும் பறிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற அறிவுறுத்தியதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி தொடர்புடைய கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேனாறும், பாலாறும் ஓடும் என்பது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளை கடந்த பின்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை கூட நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 24 மாதகால அகவிலைப்படியில் தொடங்கி ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமனம் வரை அனைத்தையும் முடக்கிய திமுக அரசு, காலியாக இருக்கும் காலிப்பணியிடங்களைக் கூட நிரப்பாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவது அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்துப் பேசுவார் என்றால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயாராக இருப்பதாக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வெளிப்படையாகவே அறிவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், இனியும் மறுக்கும் பட்சத்தில் அதற்கான விளைவை அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்கொள்ள நேரிடும் என திமுக அரசுக்கும், அதன் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
November 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புகழ்பெற்ற நாவல்கள், சிறுகதைகள், தொலைக்காட்சி தொடர்களை எழுதி வந்த பிரபல எழுத்தாளர் திரு.இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு.இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
November 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பிரபல திரைப்பட மூத்த நடிகர் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. நாடக நடிகராக அறிமுகமாகி திரைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை தக்க வைத்திருந்த திரு.டெல்லி கணேஷ் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
November 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேரறிஞர் பெருந்தகை அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகிய மூவரின் தீவிர பற்றாளரும் மூத்த அரசியல் தலைவருமான பெரியவர் பண்ருட்டி திரு.ராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாள் இன்று. பண்ருட்டி திரு.ராமச்சந்திரன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
November 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உலகமே வியக்கும் அளவிற்கு புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவரும், வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னர்களில் முதன்மையானவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1039வது சதயவிழா இன்று. பெண்களுக்கு சம உரிமை, கட்டடக் கலை, நுண்கலை, நீர் மேலாண்மை, நில அளவை, விவசாயம் மற்றும் குடவோலை முறையில் உள்ளாட்சி தேர்தல் என அனைத்து துறைகளிலும் சக மன்னர்களுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆளுமையும், வீரத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.
November 9, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றியம், துவார் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.C.மைனர் அவர்களின் தாயார் திருமதி.C.பூரணம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணியிட மாறுதலுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் – சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் செவிலியர் காலிப் பணியிடங்களுக்கான பொது கலந்தாய்வு வரும் 11, 12 ஆகிய தேதிகளில் அந்தந்த சுகாதார மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான காலிப்பணியிடங்கள் கலந்தாய்வுக்கு முன்பாகவே லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலமாக புதியதாக பணிக்கு சேர்ந்தவர்கள் 6 லட்ச ரூபாய் முதல் 12 லட்சம் வரை பணத்தை லஞ்சமாக கொடுத்து பணியிடங்களை முன்கூட்டியே பெற்றுவிட்டதால், பணவசதி இல்லாமல் பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணியாற்றிவரும் செவிலியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்கள் எத்தனை? எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு காலிப்பணியிடங்கள் உள்ளன? என்பது குறித்து முழுமையான விவரங்களை வெளியிடாமல் நடைபெறும் கலந்தாய்வு எப்படி நேர்மையாக நடைபெறும் ? என்ற கேள்வியை செவிலியர்கள் எழுப்பியுள்ளனர். ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் நிலவும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறை, தற்போது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வையும் வெளிப்படைத்தன்மையாக நடத்த மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, பொது கலந்தாய்வுக்கு முன்பாகவே லஞ்சம் பெற்றுக் கொண்டு செவிலியர் பணியிடங்களை ஒதுக்கியிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் வெளிப்படைத்தன்மையோடு பொது கலந்தாய்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
November 8, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் துணைப் பிரதமருமான பாரத ரத்னா திரு.எல்.கே.அத்வானி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேச நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு செயல்படும் திரு.எல்.கே.அத்வானி அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள்பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
November 8, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 8 பேர் உயிரிழப்பு – டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகால தொற்றுநோய்களும் தீவிரமடைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. காய்ச்சல், சளி, தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, மயக்கம் போன்ற டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். அடுத்த சில மாதங்களுக்கு டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படும் நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் குறித்தும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, இனியாவது விளம்பர அரசியலை தவிர்த்து, மக்களை பெருமளவு பாதிக்கும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுப்பதோடு, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
November 8, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தவரும், தலைசிறந்த பேச்சாளருமான நாவுக்கரசர் திரு.காளிமுத்து அவர்களின் நினைவு தினம் இன்று. சாமானிய தொண்டராக அரசியலுக்குள் நுழைந்து அமைச்சராகவும், சபாநாயகராகவும் உயர்ந்து சட்டப்பேரவையை வழிநடத்திய திரு.காளிமுத்து அவர்கள் தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் ஆற்றிய பணிகளை நினைவில் வைத்து போற்றுவோம்.