டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழையால் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் நெற்பயிர்கள் – கால்வாய்களை முறையாக தூர்வாராமல் விவசாயிகளை துயரத்துக்குள்ளாக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள தாளடி சாகுபடி பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடப்பாண்டில் ஏற்கனவே காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் போதுமான பயனளிக்காத நிலையில், தற்போது ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தொடங்கிய தாளடி சாகுபடியும் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருப்பதால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தஞ்சை – நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாய்காலை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும், வேளாண்மைத் துறையும் அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே, தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்க காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, கனமழை காரணமாக விளைநிலங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் பருவமழைக்கு முன்பாகவே கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடம் ஒதுக்கிட கோரி போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை ஒடுக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது – மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கொடுத்த பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை வழங்கக் கோரி சின்ன உடைப்பு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுடன் கூடிய விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று ஏற்பாடுகளைக் கூட செய்து தர மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. சின்ன உடைப்பு கிராம மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவலர்களை குவித்து அச்சுறுத்துவதோடு, அவர்களின் குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதியை நிறுத்துவதும், மின்சார இணைப்பை துண்டிப்பதும் திமுக அரசின் அடக்குமுறையையும், ஆணவப்போக்கையும் வெளிப்படுத்துகிறது. எனவே, தங்களின் வாழ்வாதார தேவைகளுக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்ன உடைப்பு கிராம மக்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் உறுதியோடு இறுதி வரை போராடிய விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த தமிழ் இலக்கியவாதியுமான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தினம் இன்று. ஆங்கிலேயர்களின் அரசியல் நெருக்கடியோடு பொருளாதார நெருக்கடியையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு அரசியல்வாதியாக, அறிஞராக, வழக்கறிஞராக தேச நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.

அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் தனிநபர், இரட்டையர் மற்றும் குழு பிரிவு என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை காசிமா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.ஒரே உலகக் கோப்பை போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் தமிழக வீராங்கனை காசிமா அவர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக செயல்பட்டு வந்த ஓய்வுதிய இயக்குநரகத்திற்கு மூடுவிழா நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – மறு சீரமைப்பு எனும் பெயரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான விரோதப் போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும். ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் தகவல் தொகுப்பு மையம் ஆகிய துறைகளை கருவூலக் கணக்குத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பதோடு, இரு துறை தலைவர்களின் பதவியையும் பறிக்கும் வகையிலான அரசாணையை தமிழக அரசின் நிதித்துறை பிறப்பித்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலக் கணக்குத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அரசாணை, பழைய ஓய்வூதியத் திட்டம் எனும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை எக்காலத்திற்கும் நிறைவேறாது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அறிவித்த ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றாத திமுக அரசு, தற்போது ஓய்வூதிய இயக்குநரகத்திற்கும் மூடுவிழா நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சுமார் 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்னைகளுக்கு தீர்வு காண தனியாக இயக்குநரகம் இல்லாமல், கருவூல கணக்குத் துறையின் தலைவரே அதனையும் சேர்ந்து கவனிப்பார் என்ற தமிழக அரசின் அரசாணை எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. எனவே, மறுசீரமைப்பு எனும் பெயரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான விரோதப் போக்கை உடனடியாக கைவிடுவதோடு, ஓய்வூதிய இயக்குநரகத்திற்கு மூடுவிழா நடத்தும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப்பெற்று ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

ஊர் ஊராக சென்று தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு தேர்தலுக்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் – திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஈர்க்கப்பட்ட முதலீடுகளையும், உருவான வேலைவாய்ப்புகளையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தயாரா ? கள ஆய்வு எனும் பெயரில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்கு நடைபெற்ற அரசு நிகழ்வு ஒன்றில் பேசும்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பத்துலட்சம் கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகளை ஈர்த்திருப்பதாக கூறியிருப்பது வேடிக்கையானது. சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொடங்கி சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சுற்றுப்பயணம் செய்து திரும்பி வந்தாரே தவிர, அந்த பயணத்தால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகள் இன்று வரை வந்ததாக தெரியவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின் முதலீடுகளை ஈர்க்கவோ, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல், ஊர் ஊராக சென்று ஈர்க்காத முதலீடுகளை ஈர்த்ததாகவும், உருவாக்காத வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாகவும் பெருமை பேசி நாடகமாடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு அதனை நிறைவேற்ற மறுப்பதோடு, இதயதெய்வம் அம்மா அவர்களின் மக்கள் நலத்திட்டங்களை முடக்கியும், பல்வேறு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வரிகளையும், கட்டணங்களையும் பன்மடங்கு உயர்த்தி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுகவுக்கு எதிராக சாதாரண பொதுமக்கள் தொடங்கி விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே வீதிக்கு வந்து போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் எதிர்கால இளைய சமுதாயம், பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட கொடிய வகை போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களின் விலை மதிப்பில்லாத எதிர்காலத்தை தொலைத்து வருவதாகவும் வெளியாகும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. எனவே, இனியும் வாக்கு அரசியலுக்காக மக்களை ஏமாற்றாமல், தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வருவதோடு, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை குறித்தும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் நேர்மையாக, சுதந்திரமாக, மற்றும் நடுநிலையாக பணியாற்றுவோரை போற்றும் விதமாக கொண்டாடப்படும் தேசிய பத்திரிகை தினம் இன்று. நாகரிக வளர்ச்சிக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொண்டு மழை, வெயில், புயல் என அனைத்து பேரிடர் காலங்களிலும் துடிப்புடன் செய்திகளை சேகரித்து மக்களுக்கு வழங்கும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா ? – விளிம்பு நிலை மக்களின் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் தடைபோடும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தங்கள் குழந்தைகளுடன் 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டத்தில் இயங்கிவரும் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு கடந்த ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த சாதி சான்றிதழ் நடப்பாண்டில் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காட்டுநாயக்கர் சமுதாய பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதோடு, அனைத்து சமுதாயத்தினருக்கும் வழங்கப்படுவதை போல இவர்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.