டாஸ்மாக் முறைகேடு வழக்கை திசைதிருப்ப முயன்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வைத்திருக்கும் கொட்டு வரவேற்புக்குரியது – மாநிலத்தின் ஆளுநருக்கான அதிகாரத்தை தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாராட்டுதலுக்குரியது. அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல் படியே மாநிலத்தின் ஆளுநர் நடக்க வேண்டும் என்பதோடு, குடியரசுத்தலைவருக்கு இருப்பதை போன்று மசோதாக்களை கிடப்பில் வைப்பதற்கோ, நிராகரிப்பதற்கோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்பதையும் நேற்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில், டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை திசைதிருப்பும் வகையிலும், வழக்கில் சிக்கியுள்ளவர்களை பாதுகாக்கும் நோக்கிலும், வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரிய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வைத்திருக்கும் கொட்டு மிக மிக அவசியமானது. நேற்று ஒரே நாளில் இருவேறு வழக்குகளில் கிடைத்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள், நீதித்துறையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருப்பதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கியும் ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவோர் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை பின்பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணவேந்தர் பதவியிடங்களை உடனடியாக நிரப்பும் அதே நேரத்தில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களை தப்பிக்க முயலாமல் விசாரணையை நேர்மையாகவும், நியாயமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு. குமரி அனந்தன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ் ஆர்வலராக, தலைசிறந்த இலக்கியவாதியாக, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றிய திரு குமரி அனந்தனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கும் மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு – பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட பொதுமக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், இந்த நான்காண்டு கால ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வாலும், பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தாலும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் சாமானிய மக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றும் வகையில் இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்துள்ளது. எனவே, ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக நேர்காணல் மூலம் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர் சரிவு – மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் நடப்பாண்டில் 38 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 2021 – 22 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் 68 சதவிகிதமாக இருந்த நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து, நடப்பாண்டில் 38 சதவிகிதமாக சரிந்திருப்பது அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளின் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. Apple, TCS, Wipro, Infosys உள்ளிட்ட 210 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற வளாக நேர்காணலில் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே தேர்வாகியிருப்பது அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளை விரும்பி தேர்ந்தெடுக்கும் மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் கவலையடையச் செய்திருக்கிறது. நாட்டின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் பயின்றால் வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நம்பிக்கையில் வரும் மாணவ, மாணவியர்களின் எதிர்கால கனவை நீர்த்துப் போகும் அளவிற்கு நடப்பாண்டில் நடைபெற்ற வளாக நேர்காணல் அமைந்திருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணல் மீது கூடுதல் கவனம் செலுத்தி பெரு நிறுவனங்களை அதிகளவில் பங்கேற்கச் செய்வதோடு, அந்த நேர்காணலில் தேர்வாகக் கூடிய அளவிற்கு மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனையும் மேம்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

மண்ணின் ஆரோக்கியம் மற்றும் மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்தி வேளாண்மைத் துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கியவரும், இயற்கை விவசாயத்தின் அவசியத்தை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரப்பியவருமான இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பிறந்த தினம் இன்று. இயற்கை விவசாயத்தை வெறும் தொழிலாகக் கருதாமல், வாழ்வியல் நடைமுறையாக பின்பற்றியதோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை ஆழமாக வேரூன்றச் செய்த மாமனிதர் நம்மாழ்வார் அவர்கள் காட்டிய பாதையில் பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – மாநில உரிமை பறிபோவதை இனியும் வேடிக்கை பார்ப்பது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என மாண்புமிகு மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு.சி.ஆர்.பாட்டில் அவர்களை கர்நாடக மாநிலத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சந்தித்து வலியுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற மறுத்து தமிழகத்திற்கான நீரை உரிய நேரத்தில் வழங்க மறுத்துவரும் கர்நாடக அரசு, தற்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதப் போக்குடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. கர்நாடக அரசின் இத்தகைய நடவடிக்கை, காவிரியின் குறுக்கே தமிழகத்தின் அனுமதியின்றி எந்த இடத்திலும் அணை கட்ட முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு முரணாக இருப்பதோடு, காவிரி நீரை மட்டுமே நம்பியிருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படாத நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்திற்கு கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.டி.கே.சிவக்குமார் அவர்களை அழைத்து உபசரிப்பு வழங்கிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தின் முயற்சிகளை தடுத்து நிறுத்த எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது மாநில உரிமையை விட திமுக அரசுக்கு கூட்டணி தான் முக்கியம் என்பதையே வெளிப்படுத்துகிறது. எனவே, காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கி, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடுகளுக்கு நிரந்தர தடைவிதிப்பதற்கான நடவடிக்கைகளை சட்டரீதியாக மட்டுமல்லாது, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மூலம் அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.