இராமநாதபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் – இந்திய முஸ்லீம் கட்சி எம்.பி நவாஸ் கனி ஆகியோரின் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களை சமாதானம் செய்ய முயன்ற மாவட்ட ஆட்சியர் தள்ளிவிடப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பொது இடத்தில் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழவேண்டுமே தவிர, அவர்களது ஆதரவாளர்களைக் கொண்டு அநாகரிகமாக நடந்து கொள்வது நல்லதல்ல. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய இருதரப்பினரின் ஆதரவாளர்கள் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். அரசு விழாக்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்கள் சிலர் அநாகரிகமாக நடந்து கொண்ட நிலையில் இப்போது நடந்திருப்பது அநாகரீகத்தின் உச்சமாகும். இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய வேளாண்மையான கொப்பரை தேங்காய்களை விவசாயிகளிடம் இருந்து தடையின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு மாவட்டங்களில் உள்ள 71 அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஏப்ரல் மாதம் முதல் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இலக்கு முடிந்து விட்டது என கூறி கொள்முதலை நிறுத்தி இருப்பது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெளிச்சந்தையில் தேங்காய் விலை குறைந்த நிலையில் விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களை மட்டுமே நம்பி இருக்கும் சூழலில் கொப்பரைத் தேங்காய் கொள்முதலை திடீரென நிறுத்தியது ஏற்புடையதல்ல. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த கொப்பரை தேங்காயை சேமித்து வைக்கக் கூடிய வசதிகள் இல்லாத நிலையில், மூடப்பட்ட கொள்முதல் நிலையங்களை திறக்கவும், விவசாயிகளிடம் இருந்து ஆண்டு முழுவதும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும் கீழ்பவானி பாசனக் கால்வாயை 709.60 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் தளங்கள் அமைத்து நவீனமாக்க அரசு முடிவு செய்திருப்பதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கீழ்பவானி பாசன கால்வாய் திட்டம் ஒரு மழைநீா் அறுவடை திட்டமாகவும், நிலத்தடிநீா் செறிவூட்டும் திட்டமாகவும் இருந்து வருவதால் நவீனப்படுத்துதல் என்ற பெயரில் கான்கிரீட் கரையும், தளமும் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீா் செறிவூட்டுதலில் சிக்கல் ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கபடுவதுடன் சாகுபடிக்கு தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால், வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். விவசாயிகளின் எதிர்ப்பால் 2013ஆம் ஆண்டு இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆட்சியில் இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாமல் கடந்த எடப்பாடி அரசு இந்த திட்டத்தை மேற்கொள்ள முனைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இப்போது விடியா திமுக அரசும் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி இந்தத் திட்டத்தை செயல்படுத்த முயல்வது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே பி.ஏ.பி. கால்வாய் திட்டம், முல்லைப் பெரியாறு பாசனத் திட்டத்தில் கான்கிரீட் கால்வாய் அமைத்தல் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், கீழ்பவானி பாசனக் கால்வாயை சீரமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

தஞ்சாவூரைத் தொடர்ந்து மயிலாடுதுறையிலும் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சில நாட்களுக்கு முன் தஞ்சாவூரில் இருவர் மதுவில் சயனைடு கலந்து குடித்து உயிரிழந்தது குறித்து 20 நாட்களுக்கும் மேலாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அடுத்தடுத்து இரண்டு சம்பவங்களில் சயனைடு காரணமாக உயிரிழப்பு நேரிட்டுள்ளது சாதாரணமாகக் கடந்து செல்லக் கூடிய விஷயமல்ல. தொழிலக பயன்பாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் சயனைடு சாதாரண மக்கள் கையில் எப்படி கிடைக்கிறது என்ற கேள்வியை இந்த சம்பவங்கள் எழுப்புகின்றன. தஞ்சாவூர், மயிலாடுதுறை மரணங்கள் குறித்து உண்மையை கண்டுபிடிப்பதுடன், சயனைடு பயன்பாடு அதிகரித்திருப்பது குறித்தும், அதன் விற்பனை, சட்டவிரோத பயன்பாடு ஆகியவற்றை கண்காணிப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் உடனே உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான அகில இந்திய பொதுக் கலந்தாய்வு நடத்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும். எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் ஒட்டு மொத்தமாக தேசம் முழுவதற்கும் கலந்தாய்வு நடத்தும் பட்சத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் நிராசையாகிவிடும் ஆபத்துகள் உள்ளன. மத்திய அரசே பொதுக்கலந்தாய்வு நடத்துவதால் தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்கப்படும் 69% இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % ஒதுக்கீடு ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கல்வியாளர்கள், மாணவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85% எம்.பி.பி.எஸ் இடங்களை நிரப்ப கடந்த காலங்களைப் போல மாநில அரசே கலந்தாய்வு நடத்தவும், மீதமுள்ள 15 % இடங்களில் மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தவும் வழிவகை செய்வதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், மாநில உரிமைக்காகவும் போராடிய மார்ஷல் நேசமணியின் பிறந்த நாள் இன்று. இயல்பிலேயே போராட்ட குணம் கொண்டவராகத் திகழ்ந்த திரு.நேசமணி அவர்கள், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளாவுடன் இணைக்கப்பட இருந்த கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் சேர்க்க மக்களை திரட்டி போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி கண்டவர். வளமிக்க குமரியை மீட்டெடுத்ததால் தென்மாவட்ட மக்களால் மார்ஷல் என்று அன்புடன் அழைக்கப்பட்டார். பெருமைக்குரிய திரு.நேசமணியின் பிறந்த நாளில் அவரது விடாமுயற்சியுடன் கூடிய போராட்ட குணம், தமிழ் மொழி, மாநில பற்று ஆகியவற்றை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கப்படாது என பள்ளிக்கல்விதுறை அறிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன். பணி நிரந்தரம் செய்யக் கோரியும், மே மாதம் சம்பளம் வழங்கக் கோரியும் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், இப்போது பகுதி நேர ஆசிரியர்களின் வயிற்றில் அடிப்பது போல சம்பளம் வழங்க மறுப்பது ஏன்? குறைந்த சம்பளத்தில் வீட்டு வாடகை, குடும்ப செலவு என ஏற்கனவே கடனில் தவித்து வருகின்ற பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் ஒரு மாத சம்பளம் தரப்படாது என்று அறிவிப்பதுதான் திராவிடமாடல் ஆட்சியா? 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் மே மாத சம்பளம் உடனே வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி அவர்களை பணி நிரந்தரம் செய்யவும் முதலமைச்சர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர், தென்பாண்டி சிங்கம் என போற்றப்பட்டவருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாள் இன்று. 18ஆம் நூற்றாண்டில் பாகனேரி நாட்டின் தலைவராக திகழ்ந்த மாவீரர் வாளுக்குவேலி அம்பலம், மருது சகோதரர்களுக்கு துணை நின்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிவுடன் எதிர்த்து, சூழ்ச்சியால் வீரமரணம் அடைந்தவர். சிவகங்கை மாவட்டம் பாகனேரி சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் வாளுக்குவேலி அம்பலத்தை தங்கள் குல தெய்வமாகவே வழிபடுகின்றனர். மாவீரர் வாளுக்குவேலி அம்பலத்தின் பிறந்த நாளில் அவரது துணிவு மிக்க ஆளுமையை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.