தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் – பெண்கள் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழலை உருவாக்கியிருக்கும் திராவிட மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு , கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி ஒருவரை பள்ளியில் வைத்தே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய மூன்று ஆசிரியர்கள், என ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அதைப் போலவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நின்றிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தியும் மிகுந்த வேதனையை தருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், குற்றச்சம்பவங்களும் அதிகமாக அரங்கேறும் மாநிலமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், பெண் காவலர்கள் என ஒட்டுமொத்த பெண்களும் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அளவிற்கான அவல நிலையை உருவாக்கியுள்ளது இந்த திராவிட மாடல் அரசு என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இனியாவது சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, இரவு நேரங்களில் போதுமான காவலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தி பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களோடு, அதற்கு அடிப்படை காரணமாக இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் அடியோடு ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிப்பு – மாரத்தான் ஓட்டத்திற்கு கொடுக்கும் கவனத்தை மக்கள் நலனில் செலுத்த தயங்குவது ஏன் ? சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மாலை 5 மணிக்கு மேல் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், அங்கு வரும் நோயாளிகளுக்கு செவிலியர்களே சிகிச்சை அளித்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நிலையில், அம்மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களை கூட நியமிக்காமல் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அவசர சிகிச்சைக்காக இரவு நேரங்களில் அரசு மருத்துவமனைகளை தேடி வரும் நோயாளிகளை மருத்துவர்கள் பற்றாக்குறை எனக்கூறி வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சையின்றி பல நோயாளிகளின் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட அரசு மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவும் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – மழலைக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியை கூட முறையாக வழங்க மறுக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 55 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் ஆசிரியர் மற்றும் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மழலைக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் அடிப்படைக் கல்வியை வழங்கும் நோக்கத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் போதுமான ஆசிரியர்கள் மற்றும் சமையலர்களை நியமிக்க திமுக அரசு காட்டும் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் கண்டுகொள்ளாத திமுக அரசால், தற்போது ஒரே ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று அங்கன்வாடி மையங்களை கவனிக்கும் அளவிற்கு பணிச்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர் இல்லாத அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் சமையலரே குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் நிலவுவதால் அவர்களுக்கான ஊட்டச்சத்து உணவை உரிய நேரத்தில் வழங்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கன்வாடி மையங்களில் நிலவும் ஆசிரியர் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, மழலைக் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படைக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் நேர்காணல் மூலம் அவசரகதியில் மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க முடிவா ? மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழகத்தில் நேர்காணல் (Walk In Interview) மூலம் 207 மகப்பேறு மருத்துவர்கள் உட்பட 658 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற சுகாதாரத்துறை அமைச்சரின் திடீர் அறிவிப்பு அரசு மருத்துவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அதனையும் மீறி நேர்காணல் மூலமாக மருத்துவர்களை நியமிக்க முடிவு செய்திருப்பது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழகத்தில் மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்க பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தியும் செவி சாய்க்காத திமுக அரசு, தற்போது நேர்காணல் முறையில் அவசரகதியில் மருத்துவர்களை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? என மருத்துவ சங்கங்கள் கேள்வி எழுப்புகின்றன. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது இதே நேர்காணல் முறையில் நடைபெற இருந்த மருத்துவர்கள் நியமனத்தை எதிர்த்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரான பின்பு அதே முறையே பின்பற்றி மருத்துவர்களை நியமிக்க முயற்சி செய்வது மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவர்களை ஏமாற்றும் செயலாகும். எனவே, மகப்பேறு மருத்துவர்கள் உட்பட சிறப்பு மருத்துவர்களை நேர்காணல் மூலமாக நியமனம் செய்யும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெட்ரோல் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடியதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் வரிசையில் பெட்ரோல் குண்டு கலாச்சாரமும் தலைதூக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சத்தில் இருப்பதை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டுவரும் காவல்துறையால், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டிய காவல் நிலையத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கான அசாதாரண சூழல் உருவாக்கியுள்ளது. எனவே, ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும், காவல்நிலையங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் கொலை செய்ய முயற்சியா ? – காவல்துறை ஏ.டி.ஜி.பி கல்பனா நாயக் அவர்களின் புகார் மனு மீது விரிவான விசாரணை நடத்த வேண்டும். காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டிய பிறகு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தயாரிக்கப்பட்ட புதிய பட்டியலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரிபார்க்கச் சென்ற போது தனது அலுவலகத்தில் தீ பற்றி எரிந்ததாகவும் அதன் மூலம் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாகவும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி கல்பனா நாயக் அவர்கள் காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததற்காக தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரே குற்றம் சாட்டியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கட்டுப்படுத்த முடியாத அளவு உச்சத்திற்கு சென்றிருப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஐ.பி.எஸ் அதிகாரி கல்பனா நாயக் அவர்கள் அளித்த புகாரின் மீது விரிவான விசாரணை நடத்தி, இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதா ?- விசாரணை எனும் பெயரில் பத்திரிகையாளர்களை குற்றவாளிகளைப் போல சித்தரிப்பது கடும் கண்டனத்திற்குரியது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு (SIT) முன்பாக ஆஜராகும் பத்திரிகையாளர்களை குற்றவாளிகளை போல நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக வாட்ஸ் அப் மூலமாக சம்மன் அனுப்புவதோடு, விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆஜராகும் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வதும், வழக்கிற்கு சிறிதளவும் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு அவர்களை அச்சுறுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் படி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே அதனை பொதுவெளியில் கசிய வைத்துவிட்டு, அப்பிரச்னையை மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக நிற்கும் பத்திரிகையாளர்கள் மீது பழியை போட முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, விசாரணைக்கு ஆஜராகும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதையும், அவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்வதையும் உடனடியாக நிறுத்துவதோடு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை நேர்மையான முறையில் விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டறியத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழுவையும், தமிழக காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.