சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு – தற்செயல் நிகழ்வா? திட்டமிட்ட அவமதிப்பா? சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் இந்தி மாத கொண்டாட்டங்கள் நிறைவு விழா மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன் விழா கொண்டாட்டங்கள் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தின் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” எனும் வரி விடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது தற்செயல் நிகழ்வா? அல்லது திட்டமிட்டு நடைபெற்ற அவமதிப்பா? என்பது குறித்து சென்னைத் தொலைக்காட்சி நிலையம் விரிவான விளக்கமளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து திட்டமிட்டு அவமதிக்கப்பட்டது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தையும் வலியுறுத்துகிறேன்.

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கும் தமிழகத்தில் இந்தி மாத கொண்டாட்டங்கள் நடைபெறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல – இனி வரும் காலங்களில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் இந்தி மாத கொண்டாட்டங்கள் நிறைவு விழா மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன் விழா கொண்டாட்டங்கள் நிகழ்வில் மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சொல் வளத்திலும், இலக்கணச் செழுமையிலும், செய்யுள் ஆளுமையிலும், பண்பாட்டுச் சிறப்பிலும் தலைசிறந்ததாக திகழும் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்துவதும், அதில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் விருந்தினராக பங்கேற்பதும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த ஒரு மொழிக்கும் தேசிய மொழி என்ற அடையாளத்தையோ, அங்கீகாரத்தையோ வழங்காத நிலையில், பல்வேறு மொழிகள் பேசும் இந்திய நாட்டில் இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், இந்தி பேசாத மாநிலமான தமிழகத்தில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, இந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்தி மொழி கொண்டாட்ட நிகழ்வுகளை இனிவரும் காலங்களில் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் பாக்கெட்டின் பெயரை மாற்றி விலையை உயர்த்த முடிவா?- ஏழை, எளிய மக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்ற முயற்சிக்கும் ஆவின் நிர்வாகத்தின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டில் Green Plus எனும் பெயரை Green Magic Plus என மாற்றி 500 மி.லி எடை கொண்ட பாலை 450 மி.லிட்டராக குறைப்பதோடு அதன் விலையை லிட்டருக்கு 11 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை பலமுறை உயர்த்திய திமுக அரசு, பாலின் தரத்தை உயர்த்தாமல் பெயரை மட்டும் மாற்றி ஆண்டுக்கு ஒருமுறை மறைமுகமாக விலையை உயர்த்துவதோடு, அதன் எடையையும் குறைக்க திட்டமிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், பால் பாக்கெட்டுகளின் எடை மற்றும் கொழுப்புச் சத்தை குறைத்து அதன் விலையை உயர்த்தும் முடிவை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும் என பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, ஏழை, எளிய மக்களை நேரடியாக பாதிக்கும் பால் விலையை உயர்த்தும் முடிவை கைவிடுவதோடு, ஆவின் நிர்வாகத்தின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னை மாநகர் மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுவதுமாக முடக்கிய ஒரு நாள் மழை – அடுத்தடுத்த மழை, வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை எப்படி பாதுகாக்கப் போகிறது தமிழக அரசு? சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் மாநகர் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக முடங்கியிருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி அறிவிப்புகளையும், அறிக்கைகளையும் வெளியிட்ட தமிழக அரசு, மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கு இன்றைய நிகழ்வுகளே சாட்சியாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போதும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடரின் போதும் பெரும்பலான பகுதிகளில் குளம் போல மழைநீர் தேங்கி நிற்பதும், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதும் சென்னை மாநகராட்சியின் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்குகிறது. பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றும் வகையில் கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்துவதில் சென்னை மாநகராட்சி செலுத்தும் கவனத்தை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் செலுத்தியிருந்தால், இந்தளவிற்கு பாதிப்பை சந்தித்திருக்க முடியாது என பொதுமக்கள் தங்களின் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே, ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதும், அறிவிப்புகளை வெளியிடுவதும் எந்த வகையிலும் பலனளிக்காது என்பதை இனியாவது உணர்ந்து, முழுமையான களப்பணியில் ஈடுபட்டு மழை, வெள்ளத்திலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.