அரசுப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை தன் சொந்த செலவில் செலுத்தும் தலைமை ஆசிரியர்கள் – மின்கட்டணத்தை கூட செலுத்த முடியாத பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் கல்வித் தரத்தை எப்படி உயர்த்தப் போகிறது? தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கான மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கான நிதி தற்போது வரை ஒதுக்கப்படவில்லை என நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அரசுப்பள்ளிகளுக்கு தேவையான ஸ்டேசனரி பொருட்கள், அலுவலர் பயணப்படி, மின் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காக பிப்ரவரி மாதம் ஒதுக்க வேண்டிய நிதி தற்போதுவரை ஒதுக்கப்படாத காரணத்தினால் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே தங்களின் சொந்த பணத்தில் மின்கட்டணம் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அடிப்படை வசதியின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலான வகுப்பறைகள் என ஏற்கனவே அவல நிலையில் இயங்கிவரும் அரசுப்பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை கூட உரிய நேரத்தில் செலுத்தாமல் அலட்சியம் காட்டும் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. கல்வி தான் யாராலும் அழிக்க முடியாத சொத்து என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒருபுறம் முழங்கிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் அக்கல்வியை பயிற்றுவிக்கும் அரசுப்பள்ளிகளுக்கு அத்தியாவசியத் தேவைகளை கூட ஏற்படுத்தித் தராமல் , அதற்கு மூடுவிழா நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளுக்கான மின் கட்டணம் செலுத்துவதற்கான நிதியை உடனடியாக விடுவிப்பதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற கால தாமதங்கள் ஏற்படாத வகையில் உரிய நேரத்தில் நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழிப்பறைகள் மற்றும் கடற்கரைகளை பராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் – மாதம் தோறும் ரூ 8.5 கோடி வட்டி கட்டும் சென்னை மாநகராட்சி மொத்த கடனை அடைக்க மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்னென்ன? சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவறைகளையும் ரூ 1200 கோடி செலவில் பராமரிக்கும் பணி மற்றும் கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, கடந்த 2022 ஆம் ஆண்டு 430 கோடி ரூபாய் செலவில் கழிப்பறைகள் பாராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது மேலும் 1200 கோடி ரூபாய்க்கு கழிப்பறைகளை பராமரிக்கும் பணி அதே தனியார் வசமே ஒப்படைப்பது கடும் கண்டனத்திற்குரியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான காலை உணவுத்திட்டம், கால் பந்து திடல் என ஒன்றன் பின் ஒன்றாக தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிப்பதும், கடும் எதிர்ப்பு கிளம்பிய பின் அதனை திரும்பப் பெறுவதையுமே வாடிக்கையாக வைத்திருக்கும் சென்னை மாநகராட்சி, தன் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தனியார் வசம் ஒப்படைக்க ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. சென்னை மாநகராட்சி வாங்கிய கடனுக்கு மாதம் தோறும் 8.5 கோடி ரூபாய் வட்டியாக செலுத்தி வரும் நிலையில், மொத்த கடனை அடைக்க எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்ன? தொழில் வரி, சொத்து வரி எனும் பெயரில் மக்களிடம் வசூலிக்கப்படும் வரிப்பணம் அனைத்தும் எங்கே செல்கிறது? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, கழிப்பறைகள் மற்றும் கடற்கரைகளை பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு, மாநகராட்சியின் மூலமாகவே அப்பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்வதோடு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் மீது எழுந்திருக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கத் திட்டமா? – மீன்பிடி பொருளாதாரத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் எடுப்பு கொள்கையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஏல அறிவிப்பில் தென் தமிழக ஆழ்கடலின் 9990.96 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் இடம்பெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழ்நாட்டை ஒட்டிய ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலம் அப்பகுதிகளில் இருக்கும் அரிய வகை ஆமைகள், பாலூட்டிகள் உள்ளிட்ட முக்கியமான கடல்வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பை சந்திக்கக் கூடும் என கடல்சார் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் போது வெளியாகும் ரசாயனக் கழிவுகளால் மீன்வளம் பெருமளவில் குறைவதோடு, மீன்பிடி பொருளாதாரத்தையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்பதால், மத்திய அரசின் இந்த ஏல அறிவிப்பு மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கடல் வளத்தையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்வதோடு, அதற்காக வெளியிடப்பட்ட ஏல அறிவிப்பையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

அரசுப் பேருந்துகளின் குறிப்பேடு பதிவை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதா ? தாய்மொழி தமிழை புறக்கணிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. சென்னைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அரசுப் பேருந்துகளின் வழித்தட எண், புறப்படும் நேரம், பழுதுகள் மற்றும் குறைபாடுகள் உள்ளிட்டவற்றை குறிப்பிடும் வாகனக் குறிப்பேடு படிவம் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக தமிழில் இருந்த வாகனக் குறிப்பேடு எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டிருப்பதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வித்தகுதியில் பணிக்குச் சேர்ந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் வாகனப் பழுது மற்றும் குறைபாடு விவரங்களை எழுதுவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்திக்கு எதிராக மேலும் ஒரு மொழிப்போரை சந்திக்கக் தயாராக இருப்பதாக வீரவசனம் பேசும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், தன் சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலேயே தாய்மொழி தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? அரசுப்போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயன்படுத்தப்படும் வாகனக் குறிப்பேடுகளை கூட தமிழில் வழங்க முடியாத திமுக அரசும் அதன் முதலமைச்சர் அவர்களும், இந்திக்கு எதிராக தமிழ் காக்கும் அறப்போரில் பங்கேற்க பொதுமக்களை அழைப்பது முழுக்க முழுக்க ஏமாற்றும் செயலாகும். எனவே, ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்றி அரசுப்பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் வழங்கப்படும் வாகன குறிப்பேடு படிவத்தை தமிழில் மட்டுமே வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.