பேரறிஞர் அண்ணாவின் அன்பைப்பெற்ற மூக்கையாத்தேவர் பிறந்தநாள் நூற்றாண்டை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கின்றேன். மதுரைக் கல்லூரியில் மாணவர் மன்றச் செயலாளராக தலைமைப் பண்பை வளர்த்துக்கொண்ட மூக்கையாத்தேவர் ஊண் உறக்கமின்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர். சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் முதல் தொடர்ச்சியாக ஆறு முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டு ஏழை எளியவர்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்வை அர்பணித்தவர். மக்களவையிலும் தமிழ்நாட்டின் குரலாக செயலாற்றியவர். அன்னாரின் நூற்றாண்டு விழாவில் அவர் வழியில் நடக்க உறுதியேற்போம்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கின்றேன். ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நிலையில் இந்த மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் மக்களின் உயிர் பிரச்னையாக கருதப்படும் இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கட்டணம் ரூ.55 வரை உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு லாரி உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதால் சரக்கு கட்டணங்கள் அதிகரிப்பதன் விளைவாக காய்கறி, உணவு தானியங்களின் விலை உயரக்கூடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. எனவே, லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். அதே போல காலாவதியான சுங்க சாவடிகளை உடனடியாக மூட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களுக்கு இதயம் கனிந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மொழியால் வேறுபட்டிருந்தபோதிலும் வணிகம், அரசியல், பண்பாட்டு, கலை, இலக்கியம் ஆகிய தொடர்புகளுடன் தென் இந்தியாவின் சகோதர, சகோதரிகளாக தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களும் நம்முடன் ஒன்றுபட்டிருக்கின்றனர். யுகாதி புத்தாண்டு கொண்டாடும் இந்த தருணத்தில் இப்போது போல எப்போதும் எல்லா வளமும் பெற்று அன்பும், ஆரோக்கியமும் அவர்கள் வாழ்வில் என்றும் நீடித்து நிலைத்திருக்க விரும்புகின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.