சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அடிப்பாலாறு பகுதியில் கடந்த 14ஆம் தேதி இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜா என்ற மீனவர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். மீனவர் ராஜாவும், அவரது நண்பர்களும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மான் வேட்டையாடியதால் வானத்தை நோக்கி சுட்டதாக வனத்துறையினர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை மீனவர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர துப்பாக்கி சூடு நடத்தியது சட்டத்தை மீறிய செயலாகும். எந்த வகையிலும் அதனை நியாயப்படுத்த முடியாது. இந்த துயரச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பின்னரும் இது குறித்து கர்நாடக வனத்துறைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது மீனவர் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜா உயிரிழக்கக் காரணமான கர்நாடக மாநில வனத்துறைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன், உயிரிழந்த மீனவருக்கு இருமாநில அரசுகளும் நிதி உதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் கரூர் அருகே மாயனூர் கதவணை பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தகவல் அறிந்து வேதனையடைந்தேன். தனியார் கல்லூரி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்ட மாணவிகளில் நான்கு பேர், இடைப்பட்ட நேரத்தில் குளிக்கச்சென்றபோது ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர். மாணவிகளை அழைத்து சென்ற அரசு பள்ளியின் ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதையே இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினர் மற்றும் சக மாணவிகளுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க அரசு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகளை கல்வி நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகளுக்கு வெளியூர்களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் செயல்படுவதற்கான கடுமையான உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு, அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்துவருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. பல்வேறு தொழில்களில் வடமாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநில தொழிலாளர்களை நியமிப்பது அதிகரிப்பதால் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன. மேலும், அவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. பிற மாநில தொழிலாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்கவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தலைநகர் சென்னையில் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து நான்கு ஏடிஎம்களில் நடந்த கொள்ளை, திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை, கோவையில் பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை போன்ற செய்திகள் தமிழ்நாடு காவல்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்குகின்றன. கொள்ளை சம்பவங்களில் வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினரே தெரிவித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன. மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தி.மு.க. அரசு என்ன செய்யப்போகிறது?

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பசுமை விமானநிலையம் அமைப்பதற்காக 13 கிராமங்களை சேர்ந்த 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்கள் 200 ஆவது நாளாக ஜனநாயக வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடத்துபவர்களின் அழைப்பின் பேரில் அவர்களை சந்திக்கச் சென்ற பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வழ.வெற்றிச்செல்வன் தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஜனநாயக வழியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது சட்டவிரோதமான செயல் அல்ல. எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், போராட்டம் நடத்தும் மக்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மூவர் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய முக்கியமான சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி ஆளுநர் மாளிகை அரசுக்கு திருப்பி அனுப்புவதும், விளக்கம் கொடுத்த பின்னும் பலமாதங்களாக சட்டங்கள் கிடப்பில் போட்டிருப்பதுமாக நடவடிக்கைகள் உள்ளன. இப்போது மேலும் மூன்று பேர் உயிரிழப்பது வரை தாமதம் நேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, இனிமேலும் தாமதிக்காது ஆன்லைன் ரம்மி சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தம்பி அவர்கள் எத்தனை இழிமொழி உமிழ்ந்திடினும் ! நாம் நம் தரம் குறையாமல் சொல்லையும் செயலையும் அமைத்துக்கொள்ள வேண்டும். எருமைகள் சேற்றில் புரளும் – அதனை கண்டும் ஆறறிவினர் அருவியில்தான் நீராடுகின்றனர். கழுகு அழுகிய பிணத்தைக் கொத்தித் தின்கிறது ! ஆனால் கிளி கொவ்வைக் கணியைத்தான் விரும்புகிறது ! புளித்த காடியைப் பருகுவான் குடிகாரன் ; செவ்விளநீர் தேடுகிறான் பண்பாளன் . எவர் எத்தகைய இழிமொழி பேசிடிடினும் தம்பி. நீ காணம் பாடிடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும். பண்பு மறந்து கண்ணியமற்று காழ்ப்புக் காரணமாக என்னென்ன இழிமொழி பேசுகின்றனர் என்பதை எண்ணிடும்போது தம்பி ! நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் வெற்றி கிடைத்திட மேலும் உறுதியும் ஊக்கமும் பெற்றுக் கொள்ள வேண்டும் யாராரோ வீசிடும் இழிமொழிகளை பழிச்சொற்களை எல்லாம் கேட்டுக்கொண்டுதான் ஆகவேண்டுமா அண்ணா ! என்று கேட்டால் தம்பி தயக்கமின்றி சொல்லுவேன் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும் ! நாட்டுக்கு நல்லாட்சி அமைத்திட நாம் இந்த விலை கொடுத்தாக வேண்டும் – பேரறிஞர் அண்ணா

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.