சமீபத்திய செய்தி

தமிழ்நாட்டின் எதிர்காலம் - அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்!

தமிழக மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் ‘திராவிட இயக்கத்தின் மணிமகுடம்’ புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை தொடர்ந்து நிலைநாட்டிடவும், தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்து நிறுத்தி ஒவ்வொரு தமிழரையும் தலை நிமிர்ந்து வாழ வைத்திடவுமே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. தன்மானம் குறையாமல் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கம்.

எந்த வகையிலும் ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்கிடவும், உணவு, உடை, உறைவிடம், கல்வி, சுகாதாரம் ஆகிய அத்தியாவசியத் தேவைகளில் தன்னிறைவு பெற்று, தனித்துவம் மிக்கத் தமிழராக, பெருமைமிகு இந்தியராக ஒவ்வொருவரும் முழுச் சுதந்திரத்துடன், பொருளாதார ஏற்றம் கண்டு வாழ்ந்திடுவதற்கான வழிவகை செய்வதும், இயற்கை நமக்கு அள்ளித்தந்த வளங்களை பாதுகாப்பதுமே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை கொள்கை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்த்தெடுக்கப்பட்ட பேரியக்கமும், அந்த இயக்கத்திடம் இருந்த தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பும் சிலரின் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அடகு வைக்கப்பட்டபோது அம்மாவின் உண்மைத்தொண்டர்களிடம் ஏற்பட்ட மனக்குமுறலின் வெளிப்பாடுதான் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்! மதுரை, மேலூரில் மார்ச் 15, 2018 ல் லட்சோப லட்சம் தொண்டர்களின் உணர்ச்சிப் பிரவாகத்தில், நியாயத்தின் சுடரொளியாக, அதர்மத்தை அகற்றி, தர்மத்தை நிலைநாட்டிட தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி இது.

அண்ணா ஆரம்பித்த கட்சியைத் தீயசக்திகள் ஆக்கிரமித்த போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புதிய இயக்கம் கண்டதைப் போன்று, அம்மா கட்டிக்காப்பாற்றிய கட்சி, அதன் மேன்மையை இழந்தபோது மக்கள்செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் கண்ட இயக்கம் இது. அம்மாவின் இயக்கத்தை மட்டுமல்ல; அம்மா அவர்களால் கட்டிக் காப்பாற்றப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளும் காவு கொடுக்கப்பட்டபோது அதனை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும், தமிழகத்தை அம்மா காலத்து கம்பீரத்தோடு தலைநிமிரச் செய்ய வேண்டிய காலத்தின் கட்டளையும் இந்த இயக்கத்தின் கைகளுக்கு வந்து சேர்ந்தன.

அப்படி உருவான இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே, பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும், சவால்களையும் சந்தித்து மிகக்குறுகிய காலத்திலேயே பெரும் மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகளவில் இளைஞர் சக்தியைக் கொண்ட இயக்கமாக திகழ்கிறது.

பணம், பதவி இவற்றை எல்லாம் துச்சமென நினைத்து அம்மா அவர்களின் கொள்கைகளைக் காப்பதும், அவர்கள் வழி நின்று தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் காப்பதுமே தலையாய பணி என்று களமிறங்கிய லட்சோப லட்சம் தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் உயிர் நாடியாக இருக்கிறார்கள்.

புரட்சித்தலைவி அம்மா என்கிற மந்திரச் சொல் இயக்கத் தொண்டர்களின் ஊனோடும், உயிரோடும் கலந்திருக்கிறது. அம்மா அவர்களின் பெயரைத்தான் இந்த இயக்கம் தாங்கியிருக்கிறது. அம்மா அவர்களின் திருவுருத்தைத்தான் கழக கொடியில் ஏந்தியிருக்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்கும் தமிழகத்தின் தலைசிறந்த எதிர்காலத்திற்காக உழைப்பதற்கும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் உறுதியோடு களத்தில் நிற்கும். மக்களின் மனங்களை வென்றெடுத்து புதியதோர் தமிழகத்தை, பொற்கால தமிழகத்தை நிச்சயம் உருவாக்கிடும்!